டிராக்டர் நிலைதடுமாறி 2 பெண் கூலித் தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தாகவுண்டனூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கதிரிமங்கலம் பகுதியில் இருந்து டிராக்டரில் செங்கல்கள் ஏற்றிக் கொண்டு பணியாண்டப்பள்ளி சென்று கொண்டிருந்தனர். இதில் டிராக்டர் வாகனத்தில் கூலி தொழிலாளிகள் சின்னத்தாய் மற்றும் பழனியம்மாள் ஆகிய இருவரும் செங்கல்கள் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
அப்போது ஏரிக்கரை வளைவில் டிராக்டர் சென்ற நிலையில் திடீரென நிலைதடுமாறிய வாகனம் இடது புறமாக விழுந்துள்ளது. இந்த விபத்தில் வாகனத்தின் மேல் அமர்ந்து வந்த 2 பெண் தொழிலாளிகளும் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.