தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் ஒமிக்ரான் பரவலும் வேகமாக அதிகரித்து வந்ததால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலை மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் “எமிஸ்” என்ற வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடக்கப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் அனைத்தும் பாடவாரியாக பட்டியலிடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பற்றி பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டத்தில் குடிமங்கலம், அவிநாசி, மடத்துக்குளம், மூலனூர், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில், பொங்கலூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 188 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதேபோல் ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காணிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் குறைபாடுகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.