இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தற்போது டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பொதுமக்கள் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கார்டில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் கைரேகை சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 இந்த ரேஷன் அட்டை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இதற்கிடையே ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தற்போது புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி அம்பத்தூர், சென்னை, முகப்பேர், கொரட்டூர், மாதவரம், திருவேற்காடு, ஆவடி, செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய ரேஷன் கார்டு வேண்டி ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதையடுத்து புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 6 மாதங்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை இந்த புதிய ரேஷன் அட்டையை பயன்படுத்தி பெற முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதேபோல் ரேஷன் கார்டை நியாயவிலை கடைகளுக்கு சென்று கொடுத்தால் அங்கு கைரேகை பதிவு இயந்திரத்தில் அந்த கார்டு முடக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வருகிறதாம். எனவே புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதேபோல் ரேஷன் அட்டைதாரர்கள், ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாமல் போனது.