தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் வாய்திறக்க வேண்டியுள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் அண்ணாமலை தைரியமாக செய்தியாளர்களிடம் எதை வேண்டுமானாலும் கூறுவார். சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சிஅல்ல. பாஜகதான் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது எனக் கூறியுள்ளார்.
அதிமுகவினரின் உதவியோடு சட்டமன்றத்தில் உள்நுழைந்து விட்டு நயினார் நாகேந்திரன் போன்ற சிலர் இவ்வாறு கூறிக் கொண்டு இருப்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி கொடுத்துள்ளது. அதிமுகவின் தயவால்தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தோம் என்பதை மறந்துவிட்டு பாஜகவினர் இவ்வாறு பேசக்கூடாது என அதிமுக தொண்டர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மோடியாக இருந்தாலும் சரி அமித்ஷாவாக இருந்தாலும் சரி அம்மாவை காண போயஸ் கார்டனுக்கு வந்தவரை எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. எப்போது ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் சேர்ந்து டெல்லி சென்று மோடியை சந்திக்க தொடங்கினார்களோ அன்றே எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. அதன் உச்ச கட்டமாக தான் இப்போது வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் அதிமுகவில் ஆண்மையை பற்றி பேசுகின்றனர். நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு வெறும் கண்டிப்போடு அதிமுக தலைமை விட்டுவிடக்கூடாது. எதிர்வரும் நகராட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியை நிராகரிக்க வேண்டும் என தொண்டர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.