தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் கடலோர மாவட்டமான புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் 29, 30ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
அதனை தொடர்ந்து 31ஆம் தேதி தென் தமிழகம் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.