சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னையாபுரம் பகுதியில் ரமேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டயபுரத்தில் உள்ள டாஸ்மாகில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் பாண்டியன் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை-எட்டயபுரம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ரமேஷ் பாண்டியனும், கண்ணனும் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.