சேலத்தில் 23 வருடங்களுக்கு பிறகு தாய் மகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் அமுதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 1996ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரங்கநாதன் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றியுள்ளார். இதனால் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமம் உற்ற அமுதா ஒரு குழந்தையை தத்து கொடுத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார். அதன்படி கிறிஸ்து மிஷின் என்ற அமைப்பில் தன்னுடைய குழந்தையை தத்து கொடுத்துள்ளார். அந்த அமைப்பில் குழந்தை வளர்ந்து வந்துள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தையை ஜெர்மன் நாட்டை சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.
அதோடு அந்த குழந்தைக்கு அமுதவல்லி என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் அமுதவல்லிக்கு தற்போது 23 வயது ஆகும் நிலையில் அவருக்கு ஒரு சந்தேகம் மனதில் எழுந்துள்ளது. அதாவது தன்னுடைய பெற்றோர் நல்ல சிவப்பாகவும் தான் மாநிறமாகவும் இருப்பதற்கான காரணம் குறித்து அவர் ஆராய்ந்துள்ளார். இது குறித்து தன் பெற்றோரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அமுதவல்லியின் பெற்றோர்கள் முதலில் மழுப்பலான பதிலை கூறி சமாளித்து சமாளித்து உள்ளனர் தொடர்ந்து அமுதவல்லியின் தொந்தரவு தாங்க முடியாமல் உண்மையை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அமுதவல்லிக்கு தன்னை ஈன்றெடுத்த தாயை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய ஆசையை வளர்ப்பு பெற்றோரிடம் கூறி தமிழ்நாட்டிற்கு தாயைக் காண அமுதவல்லி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சேலத்தில் வசித்துவரும் தன்னுடைய தாயை அமுதவல்லி பார்த்துள்ளார். மற்றும் 23 வருடங்களுக்குப் பிறகு தான் பெற்ற மகளை கண்ட அமுதாவிற்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமுதவல்லிக்கு தமிழ் பேச தெரியாதால் அவர்கள் இருவரும் தங்களுடைய மனதில் இருப்பதை உணர்வுகளின் மூலம் பறிமாறிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.