கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் வெங்காய மண்டி உள்ளது. இதனை சகுனிபாளையம் பகுதியில் வசிக்கும் சசிகுமார், தண்டபாணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் சசிகுமாரும், தண்டபாணியும் வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து 2 பேரும் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.