தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்திடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து அதிமுக சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் “நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய காவல்துறை பணியாளர்களையும், அரசு அலுவலர்களையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடாது.
தற்போது ஆட்சியில் உள்ள திமுக வெறுப்பையும், எதிர்ப்பையும் கொண்டிருக்கக்கூடிய நிலையில் காவல்துறை அலுவலர்களும், அரசு ஊழியர்களும் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கு தயாராக உள்ளார்கள். இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் தபால் வாக்குகளை செலுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே திமுகவினர் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிகார பலத்தை வைத்து தபால் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள்.
எனவே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த காவல் துறை அலுவலர்களையும், அரசு அலுவலர்களையும் பயன்படுத்த வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை படித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.