அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வரும்அரசு பேருந்து ஒன்றில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்தில் இறங்கி சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நாலாட்டின்புதூர் பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு கொண்டு சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இசக்கிமுத்துவை கைது செய்ததோடு அவரிடமிருந்த சுமார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.