தேர்தலை ஐந்தரை ஆண்டுகளாக தாமதப்படுத்திய தேர்தல் ஆணையத்தால் 5 நாட்கள் கூட கால அவகாசம் தர முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பாட்டாளி சொந்தங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். இந்த வாரத்தில் நான் எழுதும் இரண்டாவது மடல் இது. தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து என் எண்ணம் முழுவதும் தேர்தல் குறித்து தான் இருக்கிறது. கடந்த முறை நான் எழுதிய மடலில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு எப்படியும் ஒரு வார காலம் அவகாசம் இருக்கும் என நான் கூறி இருந்தேன். ஆனால் அவ்வாறான கால அவகாசம் அளிக்கப்படவில்லை. நேற்று மாலை தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு நாளை காலை வேட்புமனுத்தாக்கல் என கூறிவிட்டனர். இடையில் ஒரு பகல் மட்டுமே மீதம் உள்ளது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை தேர்தல் ஆணையம் எப்போதும் ஆளுங்கட்சிக்கு தான் சப்போர்ட்டாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எதுவும் எப்படியும் போகட்டும் நம் குறிக்கோள் எல்லாம் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி ஒன்றே ஆகும். எனவே அதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டு வெற்றிக்கனியை ஏற்ற அயராது பாடுபட வேண்டும் என பாட்டாளி சொந்தங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வெற்றி ஒன்றே நமது குறிக்கோள் இதற்காக பரப்புரையும் மக்கள் சந்திப்பையும் இன்றிலிருந்தே நாம் தொடங்க வேண்டும். அதனை எல்லாம் மாவட்ட செயலாளர்கள் சரியாக கண்காணிக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் கொடுக்காததால் யாரும் மனம் வெம்பி விடக்கூடாது.
ஐந்தரை ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்த தேர்தல் ஆணையத்திற்கு 5 நாள் கூட அவகாசம் கொடுக்க மனமில்லை போலிருக்கிறது. எது எவ்வாறு போயினும் பாமகவின் வெற்றி என்பது நிச்சயமான ஒன்று. எனவே பத்து பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டும். அதோடு வெற்றி என்பதை இலக்காக வைத்து பாமக தொண்டர்கள் அனைவரும் அயராது பாடுபடவேண்டும்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.