நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1 முதல் ரூ.5 லட்சம் வரையிலான டிஜிட்டல் உடனடி கட்டணச் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ வசதிகளை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு IMPS அம்சத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் எஸ்பிஐ தற்போது இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், IMPS பரிவர்த்தனைக்காக ஒரு வாடிக்கையாளர் எஸ்பிஐ கிளைக்குச் சென்றால், தனிநபர் IPMS கட்டணத்தை ஏற்கனவே உள்ள அடுக்குகளில் செலுத்த வேண்டும். தற்போது, ரூ. 1,000 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள ஆஃப்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.
அதேசமயம் ரூ. 1,000 மற்றும் ரூ. 10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், ரூ. 10,000க்கு மேல் மற்றும் ரூ. 1,00,000 வரையிலான ஆஃப்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ரூ.1,00,000க்கு மேல் மற்றும் ரூ.2,00,000 வரையிலான ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 சேவைக் கட்டணம் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.