தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையான இன்றும் ( ஜன.29) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.