மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் டிராக்டர் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் தர்ஷனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் சுப்பிரமணி வெளியே சென்றுவிட்டார். இதனால் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜேஷ் என்பவரிடம் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு வசந்தி கூறியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்த பிறகு ராஜேஷின் மோட்டார் சைக்கிளில் வசந்தியும், தர்ஷனாவும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் ராம் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது தர்ஷனாவின் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிள் பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்து இறுக்கி தலை துண்டாகி தர்ஷனா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தனது கண்முன்னேயே மகள் இறந்ததால் வசந்தி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.