ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் லட்சுமி மில் மேம்பாலத்திற்கும் இடையே திலகர் நகர் பகுதியில் தண்டவாளத்தில் பெண் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் அந்த பெண் ரயிலில் அடிபட்டு இறந்ததும், மேலும் அவர் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் கணேசன் மனைவி மலையழகு என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மலையழகின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.