உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் அதிபரை சந்திப்பதற்கு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.
இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது திட்டவட்டமாக தெரிகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து அதனை தங்கள் வசப்படுத்திக் கொண்டால் அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினை இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமரின் அலுவலக செய்தியாளர் பேசியதாவது, ராஜாங்க ரீதியில் உக்ரேன் விவகாரத்தை கையாளும் படி ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினை வலியுறுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவில் போர் மூலம் ரத்தம் சிந்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.