மோசடி செய்த தம்பதியினரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார் பாளையம் பகுதியில் தங்கராஜ்-லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ராஜகணபதி கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 6 பவுன் தங்க நகையை டெபாசிட் செய்தால் மாதம் 2,500 ரூபாய், 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 3,000 ரூபாய் வட்டி வழங்கப்படும் என்று தம்பதியினர் அறிவித்துள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் நகை மற்றும் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆரம்பகாலத்தில் தம்பதியினர் வட்டி பணத்தை சரியாக வழங்கியுள்ளனர்.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு கணவன், மனைவி இருவரும் வட்டி பணத்தை கொடுக்காமல் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் பணம் மற்றும் நகை டெபாசிட் செய்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.