குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அதற்கு முன்னதாக மாணவி ரபீஹா, ஹிஜாப் அணிந்திருந்ததால் விழா அரங்கிற்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தங்கப்பதக்கத்தை அவர் நிராகரித்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுத் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், ”டிசம்பர் 23ஆம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அதே விழாவில் ரபீஹா அப்துல்ரஹிம் என்கிற மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தங்கப்பதக்கம் வென்ற அந்த தொடர்பியல் துறை மாணவி நீங்கள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் காவல் துறையினரால் வெளியேற்றபட்டிருக்கிறார். நீங்கள் வெளியேறிய பிறகே மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணம் தனது தோற்றமும், உடையும்தான் என்று மாணவி ரபீஹா நம்புகிறார். எல்லாவிதமான தேர்வுகளுக்கான சுதந்திரமும் உரிமையும் உள்ள ஒரு நாட்டில் ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு இந்திய பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
‘வன்முறையில் ஈடுபடுபவரை அவரது உடைகளை வைத்தே அடையாளம் காண முடியும்” என்று பிரதமர் சொன்னதன் நேரடி விளைவாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தையே இப்படி இழிவுபடுத்துவதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் ஒளிரும் ரபீஹா போன்றவர்களை அவர்களது உடைகளை வைத்து அவமானப்படுத்தும் செயல் இங்கு சாதாரணமாக அரங்கேறுகிறது.
ரபீஹாவுக்கு ஏற்பட்ட இந்த இழிவைத் துடைக்க தாங்கள் முன்வர வேண்டும் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் கோருகிறேன். ரபீஹாவிடம் வருத்தம் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான செய்தியை நீங்கள் விடுப்பீர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் மறுத்த தங்கப்பதக்கத்தை நீங்கள் ரபீஹாவுக்கு வழங்க முன் வரவேண்டும் என்றும் கோருகிறேன்
சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள மதசார்பற்ற குடிமகனாகிய நான் விடுக்கும் இந்த கோரிக்கைகளை நீங்கள் நல்நோக்கத்தோடு பரிசீலித்து ஆவண செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.