நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தூர்-ஈரோடு சாலையில் உள்ள பழனியாண்டவர்புரம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நூல் மில்லில் கழிவுப் பஞ்சு எந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து எந்திரத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நூல் மில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் எந்திரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம் மற்றும் பஞ்சுமூட்டைகள் எரிந்து நாசமானது.