உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிப்ரவரி மாததிற்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் தரப்பட்டன.
இவ்வாறு கட்டண தரிசன டிக்கெட்டை போன்று, இலவச தரிசனத்திற்கும் பிப்ரவரி மாதம் முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே இந்த டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.
இதையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி முதல், பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக அல்லாமல், வழக்கம்போல் நேரடியாக வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இந்த முடிவை எடுத்து, இதனை செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.