மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டராதித்தம் கிராமத்தில் ராஜேஷ்-சூர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கவி என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காரின் டயர் வெடித்து ராஜேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா பாலத்திலிருந்து கீழே செல்லும் ஆற்றில் விழுந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த ராஜேஷ், சூர்யா மற்றும் அவரது குழந்தைகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.