வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை.
இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, 2 வெள்ளி கொலுசுகள் திருடுபோய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில் ராணி உடனடியாக பார்த்திபனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.