மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருணாபட்டு பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் விவசாய நிலத்தின் அருகில் இருக்கும் மலைப்பகுதியிலிருந்து மயில்கள் மற்றும் ஏராளமான பறவைகள் இறை தேடி நிலத்திற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. பின்னர் இவை பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க முடிவு செய்த மேகநாதன் விஷத்தை கலந்து அதனை நிலத்தில் தூவியுள்ளார்.
அப்போது உணவு தேடி வந்த 7 மயில்கள் விஷத்தை உண்டு துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இது பற்றி வனசரக அலுவலர் பிரபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற மேகநாதனை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.