சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் எலும்புகூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுக்கா ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சத்துணவு கூடத்தை திறந்து பார்த்தபோது குட்டி யானையின் எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் எலும்புக் கூட்டை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இந்த பள்ளியில் இருக்கும் சத்துணவு கூடத்தின் பின்பக்க சுவரில் துளை இருக்கிறது. எனவே அரிசி மற்றும் தானியங்களை சாப்பிடுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டியானை உள்ளே நுழைந்திருக்கலாம். அதன் பிறகு வெளியே செல்ல வழியில்லாமல் சத்துணவு கூடத்திலேயே குட்டியானை இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.