தமிழ்நாட்டில் நகரமைப்பு சட்டப்படி கட்டுமானம் திட்ட அனுமதி வழங்குவதற்கு பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும் ஏராளமான பகுதிகளில் கட்டட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதனையடுத்து கட்டட அனுமதி பணிகளை மறு சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ உருவாக்கி வருகிறது. மேலும் இதற்காக கட்டுமான துறையின் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் புதிய திட்டம் தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் விளக்கினர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது, புதிய திட்டத்தின்படி கட்டுமான திட்ட அனுமதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ‘இன்ஸ்டன்ட், ஆட்டோ, ரெகுலர்’ போன்ற 3 தலைப்புகளில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட இருக்கின்றன. இதில் 1,000 சதுர அடி வரையிலான நிலத்தில் தரை தளம் முதல் தளம் வரையிலான 2 வீடுகள் அடங்கிய குடியிருப்பு கட்ட இன்ஸ்டன்ட் முறையில் உடனே ஒப்புதல் வழங்கப்படும். பொதுமக்கள் 2016 அக்டோபர் 20க்கு பின் பதிவான விற்பனை பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, கட்டட வரைபடம், ஆதார் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால், 24 மணி நேரத்தில் ஒப்புதல் கிடைத்து விடும்.
அதன்பின் ஆவணங்கள் ஆய்வுக்கு அதிகபட்சமாக 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும். அடுத்ததாக 32 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு ஆட்டோ முறையில் ஒப்புதல் வழங்கப்படும். இதில் ஆவண ஆய்வுக்கு 30 தினங்கள் எடுத்துக் கொள்ளப்படும். இவற்றிற்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ரெகுலர் என்ற வழக்கமான முறையில் ஒப்புதல் வழங்கப்படும். இது, அனைத்து பணிகளும் ஆன்லைன்’ முறையில் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.