முதியவரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாப்பாத்தி ஊரணி பகுதியில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பெருமாள் தனது மகளுக்கு ஆதரவாக சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த சதீஷ் பெருமாளை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.