2021 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நடத்த மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடத்துவதற்கான முன்னோட்டம் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டும் சேர்ந்து நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக அமையும் எனவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் என்.பி.ஆர். என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், ”பொதுவாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போது எதிர்க்கட்சிகள் ஏராளமான கேள்விகள் கேட்பர். நாங்கள் இந்த மக்கள்தொகை முறையை ஏற்கவில்லை.
இந்தப் புதிய மக்கள்தொகை தொடர்பாக மக்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. மத்திய அரசு இது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும், அனைத்து கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக அவரச நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டம். எனவே இதனை ஏற்க முடியாது” என்று கூறினார்.