பண மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 10-ஆம் வகுப்பு வரை படித்த நான் கிடைக்கும் வேலையை செய்து வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு அத்தாணியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான மருதமுத்து என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அப்போதைய அமைச்சர் கே.ஏ செங்கோட்டையனின் உதவியாளராக வேலை பார்த்து வருவதாக என்னிடம் தெரிவித்தார். இந்நிலையில் 2 லட்ச ரூபாய் கொடுத்தால் கால்நடை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக அவர் என்னிடம் கூறினார். அதனை நம்பி பலரிடமிருந்து கடன் வாங்கி கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் மாரிமுத்துவிடம் 2 லட்ச ரூபாயை கொடுத்தேன்.
ஆனால் அவர் எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனையடுத்து பணத்தை திரும்ப கேட்டதற்கு 2 தவணைகளாக 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர் என்னிடம் கொடுத்தார். மீதமுள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் மாரிமுத்து மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என மணிகண்டன் புகாரில் கூறியுள்ளார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட பலர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் மீது புகார் அளித்துள்ளனர்.