கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி கொள்ளையடித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம் குமாரபாளையம் பகுதியில் சோலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடும்பாறைக்கு சென்றிருந்தார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சோலையம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து சோலையம்மாள் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் காங்கேயம் செந்தாளம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 8 பவுன் நகை, பித்தளை பாத்திரங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.