கட்டுப்பாட்டை இழந்த படகுகள் கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள், விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல் மற்றும் திருவாணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 படகுகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று மோதி கடலில் கவிழ்த்துவிட்டது. இந்த 2 படகுகளும் மோதியதில் திருவாணன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் சிறு காயங்களுடன் நீந்தி கரைக்கு சென்றடைந்தனர்.
இதனை கண்ட சக மீனவர்கள் பைபர் மற்றும் விசைப் படகுகளின் உதவியுடன் கடலில் கவிழ்ந்த படகுகளை 2 மணி நேரம் போராடி பிறகு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதனையடுத்து மீன்பிடித் துறைமுகத்தில் முகத்துவாரம் சரியான அளவில் இல்லாததால் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து மீன்பிடிக்க சென்று திரும்பும் படகுகள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.