எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரித்துள்ளது. தொடர் வைப்பு நிதியில் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். வைப்பு நிதிக்கான முதிர்வு காலம் வரும்போது நாம் செலுத்திய பணம் லாபத்துடன் மொத்தமாக கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து வைப்பு நிதியாக செலுத்தலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் வரம்புகள் இல்லை.
இந்நிலையில் இந்த தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்பிஐ வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி 1 முதல் 2 ஆண்டுகள் செலுத்தக்கூடிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 5.1 சதவிகிதமாகவும், 2 லிருந்து 3 ஆண்டுகள் செலுத்தக்கூடிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 5.3 சதவீதமாகவும், 5 -10 ஆண்டுகளுக்கு செலுத்தக்கூடிய வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 5.4 சதவீதமும் அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு இதைவிடக் கூடுதல் வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.