நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி களம் காண உள்ளது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமையிடமான கமலாலயத்தில் 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பாஜகவினர் கோவை கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் 20 சதவிகிதம் இடங்களை தங்களுக்கு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஆலோசித்த அதிமுக தலைமை 20 சதவிகிதம் இடம் உங்களுக்கு தர முடியாது எனவும் வேண்டுமென்றால் 10லிருந்து 12 சதவிகிதம் வரை உங்களுக்கு தருகிறோம். அதோடு எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறீர்கள் என்ற பட்டியலை கொண்டுவாருங்கள் அதனைப் பார்த்துவிட்டு ஆலோசித்து முடிவு செல்கிறோம் என பதில் கூறி விட்டதாம்.