வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் டெல்லியில் பெட்ரோல் பங்குகளில் மாசுகட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். இல்லையென்றால் பெட்ரோல் நிரப்பப்படாது என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் குளிர் காலங்களில் கடும் மாசுபாடு ஏற்படுகிறது.
எனவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் அவசியமாக உள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவைக் கண்டறிந்து அதன் மூலம் டெல்லியில் சுத்தமான காற்றை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம் PUC சர்டிபிகேட்டை வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் பங்குக்கு எடுத்துச் செல்வது கட்டாயம். ஒரு வேளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் வாகன உரிமையாளர்களிடம் இல்லை என்றால் அவர்களுக்கு அங்கேயே தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
டெல்லியில் கிட்டதட்ட 966 மாசு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளது. எனவே வாகனங்களுக்கு விதிமுறைகளின் படி தகுதி சான்றிதழ் அளிப்பதிலும், வாகன மாசுபாட்டை கண்காணிப்பதிலும் மாசு கட்டுப்பாட்டு மையங்கள் மும்முரமாக செயல்படும். இந்த புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வருவதன் மூலம் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.