தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்த தேங்காய் சீனிவாசன் சினிமாவில் தன்னுடைய அதீத உழைப்பு காரணமாக உயரத்திற்கு சென்றார். தொடர்ந்து இவர் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டினார். இவர் நடித்த தில்லு முல்லு படத்தில் இவருடைய கேரக்டர் இப்போது வரை பேசப்படுகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. தேங்காய் சீனிவாசன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.
அப்போது அவர் நடித்த கல் மனம் என்னும் நாடகத்தில் தேங்காய் விற்கும் வியாபாரியாக ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் தேங்காய் சீனிவாசன். அந்த நாடகம் மிகவும் பிரபலம் அடையவே அந்த நாடகம் பற்றி மேடையில் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார் காமெடி நடிகர் தங்கவேலு அப்படி பேசுகையில் தேங்காய் விற்கும் கதாபாத்திரம் செய்த சீனிவாசன் என்று கூறுவதற்கு பதிலாக தேங்காய் சீனிவாசன் என கூறி விட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பெயர் கிடைக்கப்பெற்றது பலரும் அவரை தேங்காய் சீனிவாசன் என்றே அழைத்தனர். அதன் பிறகு அவர் சினிமாவிற்குள் நுழைந்து சினிமாவில் உச்சம் தொட்டார்.