தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இன்று வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 (நாளை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நேரடி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களை முழு ஆண்டு தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்றும் பள்ளிகள் திறந்த பின்பு மாணவர்கள் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அது குறித்து விசாரிக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.