மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள புர்கினா ஃபாசோ நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி அந்நாட்டுத் தலைவரான ரோச் மார்க் காபூரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அர்பிந்தா நகரத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 35 மக்கள் கொல்லப்பட்டனர். இதனை எதிர்த்து நாட்டின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில், உயிரிழந்த 35 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு நாட்களுக்கு (டிசம்பர் 25ஆம் தேதி நள்ளிரவு வரை) துக்க நாளாக அறிவித்து அவர் பதிவிட்டிருந்தார். 2015ஆம் ஆண்டிலிருந்து புர்கினாவில் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.