அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மத்திய நீர்வள ஆணையத்தினுடைய மனுத்தாக்கலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பு மற்றும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேபி அணையை பலமாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்ய ஏற்றவாறு கேரளாவில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கும் சாலைகளை சீரமைக்கும் பணிகளை செய்வதற்கும் கேரள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
தற்போது இருக்கும் நிலைமையில் முல்லை பெரியாறு அணைக்கு செல்ல படகு தான் தேவைப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மொத்தமாக அவமதிக்கும் விதத்தில் கேரள அரசாங்கம் இயங்குவதால் அணுகு சாலையை சரிப்படுத்துவதற்கு அல்லது அங்கு இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையை குறிப்பிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில் மனு தாக்கல் செய்யாமல் அதை மொத்தமாக புறந்தள்ளிவிட்டு முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பில் மறுஆய்வு செய்வதற்கு மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இது நியாயம் இல்லாமல் இருக்கிறது. எனவே, முதல்வர் இதில் தலையிட்டு, மத்திய நீர்வள ஆணையத்தினுடைய அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பேபி அணை மற்றும் மலைப்பகுதிகளை பலப்படுத்தும் விதத்தில் மரங்களை வெட்டுவதற்கும், அணுகு சாலையை சரி செய்வதற்கும் அனுமதி அளிக்குமாறு கேரள அரசாங்கத்திற்கு ஆணையிட கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.