சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ரமேஷ், மல்லி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் டிராக்டர் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர் . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தி விட்டு தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.