உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பேருந்து ஒன்று பிரேக் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. பின்னர் டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்ற அந்த பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.
அதன் பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பஸ் மோதி இறுதியில் டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மின்சார பஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.