Categories
தேசிய செய்திகள்

முப்படைகளுக்கும் தலைமை தளபதி… இந்த முடிவுக்கு வர காரணம் என்ன?

1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதி தேவை என்பதை இந்திய ராணுவம் வலுவாக உணர்ந்தது. ஏனென்றால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இரண்டு வாரங்களுக்கு பின்னரே பாகிஸ்தானின் ஊடுருவல் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தெரியவந்தது

குளோபல் பயர்பவர் (Global Firepower) எனப்படும் உலகில் சக்திவாயந்த ராணுவங்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பின் நான்காம் இடத்திலுள்ள இந்தியாவில் பாதுகாப்புதுறையை மேம்படுத்த புதியதொரு சீர்திருத்த நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது படைகள்தான் நமது பெருமை. நம் தேசத்தின் முப்படைகளையும் மேலும் கூர்மையாக்கும் வகையில், செங்கோட்டையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவிக்கிறேன். இனி இந்தியாவில் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff – CDS)தான். இதன்மூலம் நம் படைகள் மேலும் வலிமையாகப் போகிறன” என்றார்.

Chief of Defence staff

பிரதமரின் இந்த அறிவிப்பு, அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. முப்படை தளபதிகளின் பதவிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரே தளபதி நியமிக்கப்படுவாரா அல்லது மூன்று தளபதிகளுக்கு மேலோக ஒரு பதவி ஏற்படுத்தப்படுமா போன்ற கேள்விகள் எழுந்தன. அதேபோல, இவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் என்னவாக இருக்கும், அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டால் அது ராணுவ கிளர்ச்சிக்கு வழிவகுக்குமோ என்பது போன்ற சந்தேககங்களும் எழத் தொடங்கின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முப்படைகளுக்கான தலைமை தளபதி குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த புதிய பதவி?

முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தளபதி என்ற சிந்தனை இன்றோ நேற்றோ எழுந்ததில்லை. ஜவஹர்லால் நேரு பிதமராக இருந்தபோது சீனாவுடன் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா பெருத்த அடியை சந்தித்தது. முப்படைகளுக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாததால், விமானப்படை இந்த போரில் முழுவீச்சில் பயன்படுத்தபடவில்லை என்பதே அப்போரில் ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணமாக விமர்சிக்கப்பட்டது.

Chief of Defence staff

1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்றது. இருந்தபோதும், படைகளுக்குள்ளான ஒருங்கிணைப்பு இல்லாததால், பாகிஸ்தானின் ஊடுருவல் இரண்டு வாரங்களுக்குப் பின்னரே, இந்திய பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இந்த போரில்தான் முப்படைகளுக்கும் ஒரே தளபதியின் தேவையை இந்திய ராணுவம் உணர்ந்தது. போர் முடிந்ததும் இப்போர் குறித்து ஆராய கே. சுப்ரமண்யம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்.

இந்த குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையில்தான், முதலில் முப்படைகளுக்கும் ஒரே தளபதி இருக்க வேண்டிய அவசியம் அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த எல். கே. அத்வானி தலைமையிலான அமைச்சரவை குழுவும் இதே முடிவை எடுத்தது.

கிடப்பில் போடப்பட்டது ஏன்?

பல கமிட்டிகளால் முன்மொழியப்பட்டும் முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்ற கருத்து, இத்தனை காலம் கிடப்பில் போடப்பட்டது. ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஏற்படாமல் தவிர்க்கவே இதுபோன்ற பரிசோதனை முயற்சியை அரசு முன்னெடுக்கவில்லை.

Chief of Defence staff

நம் நாட்டுடன் 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில் ஏகப்பட்ட ஆட்சி கவிழ்ப்புகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, சுதந்திரம் பெற்றவுடன் ராணுவம் தொடர்பாக இந்தியா செய்த சில சீர்திருத்தங்களே அதற்கு காரணம். சுதந்திரத்துக்கு முன் கேபினெட் அமைச்சர் என்ற பதவியிலிருந்த முப்படை தளபதியை பாதுகாப்பு துறைக்கு கீழ் கொண்டுவந்தது, மூன்று படைகளுக்கும் தனித் தனியாக படைத்தளபதிகளை நியமித்தது போன்றவையே ஆட்சி கவிழ்ப்புகள் நடைபெறாமல் இருக்க காரணம் என்பது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து.

Chief of Defence staff

தற்போது, இந்திய ராணுவத்தில் மூப்படை தளபதிகளை உள்ளடக்கிய Chief of Staff Committee என்ற வாரியம் உள்ளது. முப்படைத் தலைவர்களில் யார் மூத்தவரோ, அவரே இதன் தலைவராக செயல்படுகிறார். ஆனால், இதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றது. அதாவது, தளபதி பதவியிலிருந்து ஒருவர் எப்போது ஒய்வு பெறுகிறாரோ, அப்போது அவர் இந்த Chief of Army Staff – COAS என்ற பொறுப்பிலிருந்தும் ஒய்வு பெற்றுவிடுவார்.

2000ஆம் ஆண்டுக்கு பின் இப்பதவியிலிருந்த 19 பேரில், இருவர் மட்டுமே இரண்டு ஆண்டுகளு மேல் இப்பதவியில் இருக்க முடிந்தது. இதன் காரணமாக இப்பதியிலிருப்பவர்களால் திறம்பட செயல்பட முடிவதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

Chief of Defence staff

பல்வேறு நாடுகளில் உள்ள ஒற்றை தளபதி முறை

இதுபோன்ற சிக்கல்களை களையவே மூன்று படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி பதவியை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதுபோன்ற ஒற்றை தளபதி பதவி, உலகில் ஒன்றும் புதிதானதும் இல்லை. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதுபோன்ற பதவிகள் உள்ளன.

தலைமை தளபதி

ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப்படை தலைமை தளபதி போன்ற பதவிகளில் வகிப்பவர்களுக்கு வழங்கப்படும் நான்கு நட்சத்திர தகுதியே இந்த புதிய தலைமை தளபதி பதவியை ஏற்கவுள்ள நபருக்கும் வழங்கப்படும். அவர்கள் பெறும் அதே ஊதியமே இவருக்கும் வழங்கப்படும். அதேபோல, முப்படைகளில் எதாவது ஒரு படைக்கு தளபதியாக இருந்தவரே முப்படை தலைமை தளபதி பதவிக்கு தகுதிபெறுவர்.

Chief of Army Staff – COAS பதவியைவிட கூடுதல் அதிகாரிகங்களைக் கொண்ட இப்பதவியின் பதவிகாலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவியில் இருப்பவரின் பதவிகாலம் முடிந்த பின் அவர் வேறு எந்த அரசு பணிக்கும் தகுதி பெறமாட்டார். அதேபோல பதவிகாலம் முடிந்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் பணி செய்ய இயலாது.

Chief of Defence staff

ஆட்சி கவிழ்ப்பு போன்ற அபாயங்களை தவிர்கவும் சில வழிமுறைகள் ஏற்படுத்துள்ளன. அதாவது முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக பொறுப்பேற்கும் நபர், ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படை தளபதிகளின் முடிவுகளை ஒருங்கிணைத்து அரசுக்கு தெவிப்பவராகவும், பாதுகாப்புதுறையில் அரசுக்கு தலைமை ஆலோசகராவும் மட்டுமே இருப்பார். இப்பதவியில் இருப்பவரால் எந்த ஒரு படைக்கும் நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. இந்தியா அணுஆயுத நாடு என்பதால், அணு ஆயுதம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நபராக தலைமை தளபதி இருப்பார்.

Chief of Defence staff

இப்போது அரசுக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் பாதுகாப்புத் துறை செயலர் மூலமே கிடைக்கிறது. பாதுகாப்புத் துறை செயலர் என்பவர் குடிமை பணி தேர்வு எழுதி தேர்வாகும் சாதாரண குடிமனே அவருக்கு ராணுவம் தொடர்பான அனுபவம் இருக்காது. இதுபோன்ற சிக்கல்களை நீக்கவும் முப்படை தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் ஒரே இடத்தில் பெற இந்த முப்படை தலைமை தளபதி பதவி தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

அதுமட்டுமின்றி முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்து திட்டங்கள் தீட்டப்படுவதன் மூலம் சீரான வளர்ச்சியும் பெருவாரியான செலவுகளும் குறையலாம். பாதுகாப்புத் துறையில் செய்யப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட இப்பதவியை முதலில் வகிக்கப்போவது யார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்!

Categories

Tech |