மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதாகோவில் தெருவில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறோம் எனக் கூறி முன்பணமாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் முக்கால் பவுன் நகையை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் நகை, பணத்தை பெற்றுக் கொண்ட 2 பேரும் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இதோ வருகிறோம் என சொல்லிட்டு போனவர்கள் திரும்பி வராததால் தன்னை மோசடி செய்திருப்பதாக கொளஞ்சி உணர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இது பற்றி கொளஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை மோசடி செய்து விட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.