சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஒன்று அதிகாலை நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் சுத்தம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் அவ்வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இந்த விபத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனம் தள்ளப்பட்டது. மேலும் குப்பை லாரி அந்த சாலையின் இடதுபுறத்தில் இருக்கும் சதுப்பு நிலத்திற்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்பை லாரி ஓட்டுனர் விக்னேஷ், உதவியாளர் கார்த்திக், ஆறுமுகம் சாலையை சுத்தம் செய்யும் வாகனத்தில் இருந்த மணிமாறன், வெங்கடேஷ், வினோத் ஆகிய 6 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு விக்னேஷை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.