ராட்சத அலையில் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுகுப்பம் பகுதியில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், அலெக்ஸ் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது வீட்டில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக டேவிட்டின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் டேவிட் தனது மகனான அலெக்ஸ் மற்றும் உறவினர்களின் குழந்தைகளை நெட்டுகுப்பம் கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து குளித்துக்கொண்டிருந்த 7 சிறுவர்களையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதை பார்த்து டேவிட் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் 4 சிறுவர்களை டேவிட் பத்திரமாக காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ் மற்றும் ருத்ரா ஆகிய 2 பேரையும் சடலமாக மீட்டனர். மேலும் மாயமான சிறுவன் விக்கி தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவரையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.