தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது உறவினருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாபன் என்பவர் குத்துக்கல்வலசை அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது தனது உறவினர்களுடன் அங்கு சென்ற ராஜதுரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிவபத்மநாபன் அங்கிருந்து தனது காரில் கிளம்ப முயற்சி செய்துள்ளார். அப்போது ராஜதுரை குப்பைத்தொட்டியை தூக்கி காரின் மீது வீசியதால் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி சிவபத்மநாபன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் ஆகியோர் மீது விழுந்தது. இதனையடுத்து ராஜதுரையும், அவரது உறவினர்களும் சுரேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜதுரை உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.