சொத்து பிரச்சினையால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தீபன்குமாரின் தங்கையை திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபன்குமாருக்கும் செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபன்குமார் உருட்டு கட்டையை எடுத்து செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் திணித்துள்ளார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமாரை தீபன்குமார் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஊதியூர் காவல்துறையினர் தீபன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.