கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயா நகரில் பரத் என்ற வாலிபர் வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்றார். இந்நிலையில் அவர்கள் கொல்லிமலையை சுற்றிப்பார்த்து விட்டு அப்பகுதியில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்று குளித்துவிட்டு கீழே இறங்கி வரும்போது பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நுழைவு வாயில் அருகிலேயே பரத் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஸ்டவசமாக பரத் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கொல்லிமலை வாழவந்திநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பரத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.