கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள லெப்பை சாகிபு தெருவில் கலந்தர் நெய்னா முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த மண் சுவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் திருவாடனை செக்காந்திடல் பகுதியை சேர்ந்த குமார் என்ற கட்டிட தொழிலாளி சிக்கி பலத்தகாயமடைந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குமாரை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சென்ற குமாரின் உறவினர்கள் அவரை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னான்டோ, கிராம நிர்வாக அலுவலர் சேக்ரெட்நாத் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.