கோவிலுக்குள் புகுந்து உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராம நத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி கோவிலுக்கு வந்த கிராம மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலுடன் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.