பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
நீதிபதிக்கு எதிராக போராட்டம்
கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால் தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் சார்பில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதி மல்லிகார்ஜுன கவுடாவுக்கு எதிராக புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
மேலும் மாநிலம் முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி அம்பேத்கரை அவமதித்தற்காக ராய்ச்சூர் மாவட்ட நீதிபதி மல்லிகார்ஜுனாவுக்கு எதிராக நேற்று பெங்களூர் ஞானபாரதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்தினர். ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு நீதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் மாணவர்களின் மீது தடியடி
அதே நேரத்தில் பெங்களூரு பல்கலைகழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தயும் நேற்று காலையில் ஞானபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் ஏ. பி. வி. பி மாணவர் அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் காலதாமதம் மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது உள்ளிட்டவற்றை சரி செய்ய இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் அசாதாரண சூழ்நிலை மற்றும் மாணவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது .
இந்நிலைமையை கருத்தில் கொண்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனால் நாலாபுறமும் மாணவர்கள் சிதறி ஓடினார்கள்.மேலும் இக்கூட்டத்தில் போலீசாரும் சிக்கிக்கொண்டனர். பின் போலீசார் நடத்திய தடியடியில் மாணவி உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள். இதே போல் உதவி கமிஷனர் கோதண்டராமா உட்பட சில போலீசாரும் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.