தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி, தேர்வுகளில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி நடப்பாண்டில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயம். இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடக்கும். இந்த தகுதி தேர்வில் வெற்றி பெறுவோரின் ஓ.எம்.ஆர் விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.